நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  

Advertisment

இதனிடையே, கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற சினிமா தயாரிப்பாளரான கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவில் தவெக தலைவர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார். இது கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பார்த்திபனிடம், நடிகைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த குந்தவையை கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே குந்தவைச்சா பிரச்சனை வராது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும், சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது” என பதிலளித்தார் பார்த்திபன். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பார்த்திபனுக்கு நடிகை த்ரிஷா மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து த்ரிஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சமீபத்திய ஒரு நிகழ்வில் ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், அவருடைய உதவியாளர் மூலமாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், கடைசி நிமிடத்தில் என்னுடைய பெயரும், படமும் சேர்க்கப்பட்டதாக அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஒரு மைக்கில் சொல்வதனால் ஒரு கருத்து புத்திசாலித்தனமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை சத்தமாக மட்டுமே காட்டும்.  அறிவு இல்லாமல் பேசும் அநாகரீகமான வார்த்தைகள், யாரைப் பற்றி பேசப்படுகிறது என்பதை விட, பேசுபவரைத் தான் அதிகம் காட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து பார்த்திபன் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “சில நேரங்களில் சில தவறுகள் நோக்கம் இன்றி அரங்கேறிவிடுகின்றன. அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா புகைப்படம் வந்ததும் குந்தவை குந்தவை என அனைவரும் குரல் எழுப்பினர். அதனால் வார்த்தை ஜாலமாக மட்டுமே அப்படி பேசினேன். நான் பேசியதும் அரங்கமே கைதட்டியது. அதில் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். பின்பு அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் யாரோ ஒருவர் வெளியிட்ட வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை உணர்ந்து நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறேன். பிரச்சனைகள் பெரிதாவதை நான் என்றுமே விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூட, பெண் சுதந்திரம் பற்றி பேசுகிறேன், ஆண் பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுபாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைப்பவன் நான். எனவே பெண்ணே இந்த பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்க சக்தி” என்று பேசியுள்ளார். 

Advertisment