சென்னை தியாகராய நகரில் கடந்த ஜனவரி 11ம் நாள்,  தூய்மைப் பணியாளர் பத்மா வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ஒரு தள்ளுவண்டியில் மேல் இருந்த பிளாஸ்டிக் கவரை பார்த்தார், அதில் குப்பை தான் இருக்கும் என நினைத்துத் திறந்து பார்த்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார். காரணம், அதில் ஏராளமான தங்க நகைகள் இருந்தது, இதனைக் கண்டு திகைத்துப்போன பத்மா, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நகைகளை ஒப்படைத்தார்.

Advertisment

பின்னர், அந்த நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பத்மாவை பலரும் பாராட்டி வந்தனர். அந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 45 பவுன் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதன் மதிப்பது ஏறக்குறைய 45 லட்சம் இருக்கும் என யூகிக்கப்படுகிறது. ஏழ்மையான குடும்பமாக இருந்த போதிலும் கிடைத்த தங்க நகைகளைத் தானே எடுத்துக்கொள்ள நினைக்காமல் உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த அந்த தூய்மை பணியாளரின் செயலை அறிந்து முதல்வர் பத்மாவை அழைத்துப் பாராட்டியதுடன் ஒரு லட்ச ரூபாயைப் பரிசாக அளித்தார். இதனைத் தொடர்ந்து லலிதா ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரும் பத்மாவை அழைத்துப் பரிசளித்துப் பாராட்டினார். தொடர்ந்து ரஜினிகாந்த்தும் பத்மாவை அழைத்துப் பாராட்டி தங்க சங்கிலியையும் பரிசாக அளித்தார்.  

Advertisment

இந்த நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், பத்மாவின் பாதம் தொட்டு மரியாதை செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.