டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான படம் ‘பராசக்தி’. இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
முன்னதாக படம் வெளியாவதற்கு முன்பு திரைப்பட இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், படத்தின் கதை தன்னுடைய ‘செம்மொழி’கதையில் இருந்து திருடப்பட்டது என சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் படத் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து படம் எந்த தடையும் இல்லாமல் வெளியானது.
இந்த நிலையில் இப்படம் நாளை ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருண் ராஜேந்திரன் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த சூழலில் படத் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, இன்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ‘கடந்த 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வு. வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது.
படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை மற்றும் தனித்துவமானவை’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஓடிடி-யில் படத்தை வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us