1965இல் பொள்ளாச்சியில் மாணவர்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள், அரசால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துயர சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் பராசக்தி. மொழிப்போரை கையில் எடுத்தவர்களை மத்திய மாநில அரசுகள் எப்படி தண்டித்தன, தாய்மொழிக்காக மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் செய்த தியாகங்கள் என்ன போன்றவைகளை உள்ளடக்கி உருவாகி இருக்கும் இந்த பராசக்தி திரைப்படம் பார்ப்பவர்களை எந்த அளவு ஈர்த்து உள்ளது?

Advertisment

1950 களில் கல்லூரி மாணவராக இருக்கும் சிவகார்த்திகேயன், புறநானூறு படை என்ற இந்தி எதிர்ப்பு போராட்ட படையை வழி நடத்துகிறார். அப்பொழுது அவர் ஒரு ரயில் எரிப்பு போராட்டத்தை அரங்கேற்ற அதில் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இறந்து விடுகிறார். இதனால் மிகவும் மனம் உடைந்த சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பில் இருந்து பின்வாங்கி விட்டு தன் குடும்பம், தம்பி அதர்வாவின் படிப்பு என ரயிலில் கரி அள்ளி கொட்டும் வேலைக்கு சென்று விடுகிறார். சிதம்பரத்தில் இன்ஜினியரிங் மாணவராக இருக்கும் அதர்வா, சிவகார்த்திகேயனின் காதலி ஸ்ரீலீலாவோடு சேர்ந்து கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுக்கிறார். ஒரு கட்டம் வரை இதை தடுக்க நினைக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் தானே ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிறகு அவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதிக்கிறார். அவருடைய புறநானூறு படையும் களத்தில் இறங்குகிறது. பொள்ளாச்சிக்கு வரும் பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தை காட்ட போராடுகிறார். அதற்கு தடையாக போலீஸ் வில்லனான ரவி மோகன் பல்வேறு வகையில் இந்த படைக்கு நெருக்கடி கொடுக்கிறார். அவர்களை பாரபட்சம் இன்றி சகட்டுமேனிக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சரமாரியாக கொலை செய்கிறார். சிவகார்த்திகேயனையும் ஒடுக்க முயற்சி செய்கிறார். ரவி மோகனிடம் இருந்து சிவகார்த்திகேயன் மற்றும் அவரது படை தப்பித்ததா, இல்லையா? பொள்ளாச்சியில் மாணவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்றதா, இல்லையா? இவர்கள் ரவி மோகனை மீறி பிரதமரை சந்தித்தார்களா, இல்லையா? என்பதே உண்மை கதையில் கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து உருவாகி இருக்கும் பராசக்தி படத்தின் மீதி கதை.

Advertisment

மும்மொழி கொள்கைக்கு எதிரான இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தை இந்த கால ஜென்சி தலைமுறைகளுக்கும் புரியும் வகையில் கமர்சியல் கலந்த ஒரு தமிழ் பற்று நிறைந்த சிறப்பான தரமான படத்தை கொடுத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக இந்த பராசக்தி படம் உருவாகி இருக்கிறது. மொழிப்போர் தியாகிகளின் தியாகங்கள், அவர்களுக்கு எதிராக நடந்த சதி மற்றும் மத்திய மாநில அரசுகளின் ஒடுக்குமுறை ஆகியவைகளை மிக சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி அதை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுத்து இப்படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. மாணவர்கள் நினைத்தால் எப்பேர்பட்ட விஷயத்தையும் செய்து காட்டிவிட முடியும் என்பதை நேர்த்தியான முறையில் சரியான திட்டமிடுதலுடன் கூடிய திரைக்கதை மூலம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

para1

மாணவர்களின் எழுச்சி அவர்களின் புத்திசாலித்தனம் அரசுக்கு எதிராக அவர்கள் போடும் சமயோகித திட்டங்கள் அதே சமயம் அரசு போடும் திட்டங்களை சாமர்த்தியமாக முறியடித்திருப்பது என ஒவ்வொரு காட்சியும் அடுத்தடுத்து சிறப்பான காட்சிகளாக அமைந்து படத்துடன் நம்மை ஒன்றை வைத்து இருக்கிறது. படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் மிக விறுவிறுப்பாக நகரும் திரைப்படம் அதன் பின் காதல் காட்சிகள் குடும்ப காட்சிகள் என சற்றே வேகம் குறைந்து நகர்ந்து பின் இன்டெரெவல் இருந்து படம் ஜெட் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்து படு வேகமாக நகர்ந்து இறுதி கட்ட காட்சிகளில் பார்ப்பவர்களை கண்கலங்க செய்து தமிழ் மொழியின் வீரியமும் அதன் மீது கொண்ட பற்றையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உணர செய்யும் வகையில் சிறப்பான தரமான தமிழ் உணர்வுக்கான படமாக இந்த பராசக்தி மாறி இருக்கிறது. படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வேகத்தடைகள் ஆரம்ப கட்டத்தில் தென்பட்டாலும் அதையெல்லாம் பின்வரும் காட்சிகள் சிறப்பான காட்சிகளாக அமைந்து மறக்கடிக்க செய்து முழு படத்துடன் நம்மை ஒன்று செய்து ஒரு நல்ல தமிழ் உணர்வு மிக்க படத்தை பார்த்த திருப்தியை இந்த பராசக்தி கொடுத்திருக்கிறது.

Advertisment

சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்துக்கும் தன் உடல் பொருள் ஆவி என பல விஷயங்களை கொடுத்து நடித்து நம்மை கவர்ந்து வருகிறார். ஆரம்பகாலக் கட்டத்தில் காமெடி படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இன்றைய சூழலில் சமூகத்துக்கு அவசியமான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதே போல் நடிப்பு மட்டுமல்லாமல் தன் உடல் அமைப்பையும் அவ்வப்போது மாற்றி அதற்கு ஏற்றார் போல் கதைகளையும் தேர்வு செய்து ரசிக்க வைத்து வருகிறார். இவரது ஆத்மார்த்தமான நடிப்பு அந்தப் படத்தை நன்றாக ரசிக்க வைக்க உதவுகிறது. செழியன் என்ற தமிழ் உணர்வு மிக்க புரட்சிக்கார மாணவராக அவர் செய்யும் விஷயங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனுக்கு ஈக்குவலாக மற்றொரு ஹீரோவாகவே மாறி இருக்கும் வில்லன் ரவி மோகன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகியோர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து படத்தை இருவரும் தோளில் சுமந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் ரவி மோகனை பார்த்த மட்டத்தில் நமக்கு தொற்றிக் கொள்ளும் பயம் இறுதிக்கட்டம் வரை அப்படியே இருக்க செய்து தன்னுடைய மிரட்டல் நடிப்பின் மூலம் பார்ப்பவர்களை ஈர்த்திருக்கிறார். இந்தப் படத்தை ரவி மோகனுக்காகவே பலர் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது அந்த அளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார்.

para3

தம்பியாக வரும் அதர்வா, துடுக்கான இளைஞராக வந்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மற்றும் ஸ்ரீ லீலாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நாயகி ஸ்ரீலிலா தெலுங்கு பெண்ணாகவே இருந்தாலும் தமிழ் மொழியை அழகாக கற்றுக்கொண்டு சொந்தக் குரலின் மூலம் அதற்கு அழகு கூட்டி இருக்கிறார். சிறப்பான தமிழ் உச்சரிப்பின் மூலம் அழகான நடிப்பை அளவாக கொடுத்து பார்ப்பவர்களை கண் கவர்ந்திருக்கிறார். தமிழுக்கு ஆந்திராவில் இருந்து ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார் இந்த படம் மூலம். பெரிய பெரிய நாயகர்களுக்கு இணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர்களின் பாட்டியாக வரும் கொலப்புலி லீலா சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையாக வரும் சேத்தன், சில காட்சிகளை வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். கலைஞராக வரும் குரு சோமசுந்தரமும் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்கிறார். முதல்வர் பக்தவச்சலமாக வரும் பிரகாஷ் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் ராணா மற்றும் மலையாள நடிகர் பாசில் ஜோசப் ஆகியோர் சில காட்சிகளை வந்தாலும் கவர்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் அந்த கால தமிழகத்தை மிகச் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி நம்மை கவர்ந்திருக்கிறார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பான முறையில் அமைந்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. கலை இயக்குநர் அண்ணாதுரை அந்த கால தமிழகத்தை தன் செட்டுகள் மூலம் சிறப்பான முறையில் காண்பித்து நம்மை அந்த காலத்திற்கே கூட்டி சென்று இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மிகச் சிறப்பான முறையில் அமைந்து படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. அதுவே படத்திற்கு நாயகனாக மாறி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.

para2

சிறப்பான காட்சி அமைப்புகள் நேர்த்தியான மேக்கிங் அதற்கு ஏற்றார் போல் வீரியமிக்க சுதா கொங்கரா மற்றும் அர்ஜுன் நடேசன் வசனங்கள் ஆகியவை இந்த பராசக்தி திரைப்படத்தை உலகத்தரம் வாய்ந்த படமாக மாற்றி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இந்திக்கு ஆதரவான அரசியல் விஷயங்களுக்கு எதிராக தமிழர்கள் செய்த போராட்டங்கள், தியாகங்கள் அதன் மூலம் கிடைத்த வெற்றிகள் ஆகியவைகளை மிகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் அதேசமயம் சில புனைவு காட்சிகளை கமர்சியலுக்காக உள்ளே புகுத்தி சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தமிழ் உணர்வு மிக்க தரமான கன்டென்ட் உள்ள படமாக இந்த பராசக்தி படத்தை மாற்றி அனைவரும் ரசிக்கும்படியான படமாக கொடுத்து படத்தையும் வெற்றி படமாக மாற்றி இருக்கின்றனர். குறிப்பாக பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே மாணவர்கள் நடத்திய கூர்மிக்க போராட்ட யுக்திகள் ஆகியவைகளை கையில் எடுத்துக்கொண்டு அதை எழுச்சிமிக்க முறையில் இப்படத்தில் காண்பித்து இருப்பது மற்ற வேகத்தடை மிக்க காட்சிகளை மறக்கடிக்க செய்து சிறப்பான தரமான தமிழுக்கான படமாக இந்த பராசக்தி உருவாகி இருக்கிறது.

‘பராசக்தி’- ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படம்!