பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜன நாயகன் படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் அப்படம் இன்று வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்ட போதிலும் அதனை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், ஜன நாயகன் படம் திரைக்கு வெளியாவதில் சிக்கல் நீடித்து கொண்டே இருக்கிறது.

Advertisment

அதே சமயம், சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்திக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தணிக்கை வாரியம் இழுத்தடித்து கொண்டிருந்தது. அதாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் 10ற்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என தனிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகவும் ஆனால் அந்த நீக்கங்களைப் படக்குழுவினர் செய்யாததால் தனிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளதாகத் தணிக்கை வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், நாளை (10-01-25) பராசக்தி படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் நிலவி வந்தது.

Advertisment

இந்த நிலையில், பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோருடன் சென்று பார்க்கும் வகையில் இந்த யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டப்படியே நாளை பராசக்தி படம் திரையில் வெளியாகவுள்ளது. மேலும் ஜன நாயகன் வெளியீடு உறுதியாகாத நிலையில் பராசக்தி படம் வெளியாவதால் அப்படத்துக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.