டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். அடுத்த மாடம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் திரைப்பட இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், 'பராசக்தி' படத்தினுடைய கதை என்னுடைய கதையில் இருந்து திருடப்பட்டது எனவும் அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்
‘செம்மொழி என்ற தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2025 ஜனவரியில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி படத்தினுடைய அந்த கதையையும் பராசக்தி படத்தின் கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்திரவிட வேண்டும்’என்ற ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் படத்தின் கதாசிரியர் என பட இயக்குநர் சுதா கொங்குரா பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
பின்பு படக்குழு தரப்பில், ‘பராசக்தி படத்தின் கதையை 2020-ஆம் ஆண்டு இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். மனுதாரரின் செம்மொழி பட கதைக்கும், பராசக்தி பட கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படத்தின் கதையை திருடி இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படத்துக்கு தடை விதித்தால் பெரும் இழப்பு ஏற்படும்’ என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024-ஆம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம் தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யாததால் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/06-17-2026-01-02-18-30-48.jpg)