சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக அனல் தெறிக்கும் வசனங்கள் பலரது கவனம் பெற்றது. ‘டெல்லி தான் இந்தியாவா... நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல... என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு’ போன்ற வசனங்கள் சமூக வலைதளத்தில் பரவ, கூடுதல் சிறப்பாக முன்னாள் முதல்வர் அண்ணா கதாபாத்திரம் அமைந்திருந்தது.
இதையடுத்து தணிக்கை சான்றிதழ் பெறாமல் இப்படம் இழுபறியில் சிக்கியது. இதனால் இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நெதர்லாந்தில் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அங்கு விரைவில் நடக்கவுள்ள ரோட்டர்டாம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படுவதால் அங்கு மட்டும் ரத்து செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் இன்று தணிக்கை வாரியம் படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. மொத்தம் 25 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. தீ பரவட்டும் என்ற வார்த்தை நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது.
பட்டு நூலா என்ற வார்த்தையும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எறித்தது’ என்றும் ‘இந்தி அரக்கி’ என்ற வார்த்தை ‘அரக்கி’ என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதே போல் சிறுக்கி, இந்தி கத்துக்கிட்டு, ‘கொடியில காய வச்ச துணி மாதிரி’ உள்ளிட்ட இன்னும் 5 வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. இதோடு ‘இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நீக்கி படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது.
Follow Us