மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது
இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பா.ரஞ்சித், “எப்போதுமே திட்டுகிற இடத்தில் என்னுடைய போட்டோ மட்டும் தான் இருக்கும். அப்புறம் மாரி செல்வராஜ் வந்தார். அடுத்து வெற்றி மாறனும் வந்துவிட்டார். இந்த மூணு பேரையும் எப்போதுமே திட்டிக் கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த மூன்று பேர் தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை தடுப்பதாக விமர்சிப்பார்கள். அப்போ, மற்ற டைரக்டர் எல்லாம் படமே எடுப்பதில்லையா?
தமிழ் சினிமாவில் ஒரு வருஷத்துக்கு முன்னூறு படங்கள் வருகிறது. நான் ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் தான் எடுக்கிறேன். மாரியும் வெற்றிமாறனும் அப்படித்தான். எங்களால் தமிழ் சினிமா வளர்ச்சி தடுக்கிறதென்றால் மற்ற இயக்குனர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவை முன்னேற்ற எந்த படமும் இயக்கவில்லையா. அந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் வெற்றி பெற வைக்கலாமே” என்றார். தொடர்ந்து, “பைசன் படம் ரொம்ப தப்பான படம்னு டியூட் படத்துக்கு போக சொல்றாங்க. ஆனா அந்த பட டைரக்டர் வச்சு செஞ்சுட்டாரு” என்றார்.
Follow Us