மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’ திபாவளி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், அமீர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் துருவ் விக்ரம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.அந்த வகையில் பா.ரஞ்சித் பேசுகையில், “நான் சினிமாவுக்கு வர காரணம் எனக்கு பல யோசனைகள் இருந்தது. அதே யோசனையோடு நிறைய பேர் இருப்பாங்கன்னு தெரியும். அப்படித்தான் மாரி செல்வராஜை முதல் முறை பார்த்தேன். ராம் சார் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பி வைத்தார். என்னுடைய மெட்ராஸ் படத்தில் மாரிக்கு விமர்சனம் இருக்கிறது என்று சொல்லி, அவரிடம் பேசுங்கள் என்று அவர் என்னிடம் அனுப்பினார்.
மாரி செல்வராஜுக்கு இப்போது சினிமாவில் ஒரு தனி இடம் இருக்கிறது. ஆனால் அவரை நான் முதல் முதலில் எப்படி பார்த்தேனோ அது போலத்தான் இப்போது வரையும் பார்க்கிறேன். அவரை அப்படி பார்த்தது என்னுடைய தவறுதான். நான் எப்போதுமே மனிதர்களைத் தவிர வேறு யாரையும் நம்புகிற ஆள் கிடையாது. அதனால் நான் நம்பும் மனிதர்களிடம் முதலில் கிடைத்தது திரும்ப கிடைக்கவில்லை என்றால் அவர்களிடத்தில் கொஞ்சம் விலகிவிடுவேன். அந்த மாதிரி மாரியிடம் இருந்து நான் எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால் மாரியை நினைத்து எந்த இடத்தில் வியந்து பார்க்கிறேன் என்றால் அவருடைய கோவத்தைக் கலையாக மாற்றும் இடத்தில்தான்.
பைசன் படம் பார்த்துவிட்டு சில குறைகளை அவரிடத்தில் சொன்னேன். ஆனால் ஒரு திரை மொழியை கையாள்கிற லாவகம் அவருக்கு ஐந்தாவது படத்திலேயே வந்திருக்கிறது. சினிமா மொழி மீது ஒரு ஆத்திரமான காதல் இருக்கும் ஒரு ஆர்டிஸ்டால் மட்டும் தான் தொடர்ந்து ஒரே இடத்திற்குள் போகவே முடியும். என்னை எடுத்துக்கொண்டால் அட்டக்கத்தி என ஒரு படம் பண்ணேன். அதன் பிறகு என் வாழ்க்கைக்குள் என்னால் போக முடியவில்லை. அதற்கு தடையாக இருப்பது என்னுடைய தத்துவங்களும் நான் அடுத்தக்கட்டத்துக்கு போக வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் மாரி மீது எனக்கு முதலில் விமர்சனம் இருந்தது. ஏன் தொடர்ந்து அவர் இப்படி படம் எடுக்கிறார், அதாவது ஏன் ஒரே வாழ்க்கையை ஏன் தொடர்ந்து காட்டுகிறார். அப்படி யோசிக்கும் போது அவருடைய நேர்காணலில் அவர் சொன்னது தான். அவருடைய வாழ்க்கையில் பல கதைகள் இங்கு சொல்லப்படாமல் இருக்கிறது.
ஒரு கலை என்பது அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். அதனால் மாரி ஏன் ஒரே வாழ்க்கையை எடுக்கிறார் என யோசிப்பேன். ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை. பயங்கரமாக தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து பைசன் படத்தை பார்க்கையில் அவருடைய உலகம் இன்னும் பெரிதாக மாறியிருக்கிறது. ஒரு கலைஞனாக அவரது திரை மொழியில் நான் மாட்டிக்கொண்டேன். கலையை பயங்கரமாக கையாள்கிற இடத்திற்கு மாரி செல்வராஜ் நகர்ந்துவிட்டார். அது பைசன் படத்தில் நன்றாகவே தெரிகிறது. இந்த இடத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன், அவர் ஒரு பெரிய கலைஞன்.
படத்தில் துருவ் விக்ரம் என்பதை துருவ் என போட்டிருக்கிறார்கள். விக்ரம் சாரைப் பற்றி ஒரு சின்ன விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன். நடிப்பை பயங்கரமாக ரசித்து பண்ணக்கூடியவர்களுடன், எனக்கு படம் பண்ண பிடிக்கும். அப்படி நான் பண்ணியதில் மிரண்டு போய் பார்த்தவர்கள் இரண்டு பேர் தான். ஒன்று பசுபதி, இன்னொன்று விக்ரம் சார். தங்கலான் படம் அவருக்கு எத்தனாவது படம் எனத் தெரியவில்லை. அவரிடம் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுறீங்க, உங்களை எது தூண்டுகிறது எனக் கேட்டேன். அதற்கு அவர் நடிப்புப் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். ஆனால் தங்கலான் படத்திற்கு பிறகு அவருக்கு இந்த சமூகம் தர வேண்டிய மரியாதையைத் தந்ததா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை. அவருக்குப் பெரிய அங்கீகாரத்தை யாருமே தரவில்லை. அப்போது ஒரு படத்துடைய வணிக வெற்றியோடு ஒரு நடிகனின் நடிப்பு நின்றுவிடுகிறதா எனக் கேள்வி எழுகிறது.
தங்கலான் படத்தில் அவருடைய உழைப்பு அசாத்தியமானது. ஒரு வேளை ஒரு இயக்குநராக என்னுடைய திரை மொழி மக்களிடம் செல்வதில் சிக்கல் இருந்திருக்கலாம். ஆனால் தங்கலான் கதாபாத்திரத்துக்கு அவர் உழைத்த உடல் உழைப்பு சாதாரணமானது கிடையாது. அதை ஏற்றுக்கொண்டு பரிசளிப்பதற்கு இங்கு நிறைய மனத்தடைகள் இருக்கிறது. அது அவருக்கு ஒவ்வொரு முறையும் காயப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். அதுதான் அவரை தூண்டுகிறது எனவும் நினைக்கிறேன். அதற்காகத்தான் அவர் எதாவது முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அப்பா பயங்கரமாக நடித்தால் அவருடைய மானும் பயங்கரமாக நடிக்க வேண்டும் என அவசியம் கிடையாது. திறமை என்பது பிறப்பின் அடிப்படையில் உருவாகுவது இல்லை என நம்புகிறவன் நான். நம்முடைய வசதி வாய்ப்புகளோடு சேர்ந்து வருவது தான் திறமை. ஆனால் படத்தில் துருவுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது”என்றார்.