Advertisment

ரஜினியை எப்படி நீ அந்த டயலாக்கை பேச வைக்கலாம்? - விமர்சனங்கள் குறித்து பா.ரஞ்சித்

19 (3)

 மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது

Advertisment

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பா.ரஞ்சித், “கபாலி படம் வெளியானதும் விமர்சனங்கள் வெடித்தது. மெட்ராஸ் என்ற ஒரு படம் நான் பண்ணாமல் இருந்திருந்தால் ரஜினிகாந்த் எனக்கு கபாலி பட வாய்ப்பை கொடுத்திருப்பாரா? ஆனால் ஒவ்வொரு முறையும் விமர்சனங்கள் வரும்போது ரஜினி உனக்கு வாய்ப்பு கொடுத்தார் பாத்தியா? ரஜினியை வைத்து எப்படி நீ அந்த டயலாக்கை பேசலாம்? இது போன்ற மோசமான விமர்சனங்கள்தான் வரும். அப்போது எனக்கு குழப்பமாக இருக்கும். கபாலி பட வெற்றி தயாரிப்பாளர் தானுவிற்கு தெரியும். ரிலீஸ் ஆவதற்கு முன்பே 100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் கபாலி. ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால் அது வெற்றி என்றால் இங்கு பல படங்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதேசமயம் விமர்சன ரீதியாக மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிய வசூலை செய்தால் அது வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டிருக்கிறது.

Advertisment

ஆனால் கபாலி படத்தை இவர்கள் மோசமாக விமர்சித்தார்கள். ரஜினியை எப்படி சாதிக்குள் கொண்டு வரலாம்? அவரிடம் எப்படி பட்டியல் சமூக வசனத்தை கொடுக்கலாம்? என்றெல்லாம் விமர்சித்தார்கள். அதை எப்படி கையாளுவது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு என்ன பிரச்சனை என்றால் கபாலி படம் வெற்றி படமா தோல்வி படமா என்பதைத் தாண்டி இதற்குப் பிறகு இது போன்ற படங்கள் எடுக்கவே முடியாதா? அப்படியும் யாராவது எடுத்தால் இப்படி ஒரு சிக்கல் வருமா? என யோசிக்க வைத்தது. சினிமாவில் இதை எப்படி பேசலாம் என்று சொன்னார்கள். அப்போ இதற்கு முன்னாடி என்னை மோசமாக சித்தரித்த சினிமாக்களை இவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. 

அதனால் நான் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறேன். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுகிறது. ஆனால் அதை அவர்கள் மோசமாக சித்தரித்தார்கள். அந்தப் படத்தில் திரையாக்கம் செய்ததில் குறைபாடுகள் இருந்தால் அதை நான் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் ஆனால் ஒரு நடிகரை எப்படி இது போன்ற ஒரு வசனத்தை பேச வைக்கலாம் என்று கேட்கிறபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ரஜினிகாந்த் நடித்த மற்ற படங்கள் எல்லாம் சூப்பராக இருந்ததா. ஆனால் நல்வாய்ப்பாக ரஜினிகாந்த் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். கபாலி படத்தை நான் நன்றாக இயக்கியதாக ரஜினிகாந்த் நம்பின காரணத்தினால் தான் அவர் எனக்கு காலா படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

ஒரு பெரிய ஸ்டார் எனக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். அவரை வைத்து ஒரு கமர்சியல் சினிமா எடுத்து நான் பணம் சம்பாதித்து என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு நான் போயிருக்கலாம். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் நில உரிமை பிரச்சனையை பேசினேன். ஆனால் அந்தப் படத்திலும் ராவணனை எப்படி நீ ஹீரோவாக காட்டலாம் என்ற விவாதம் வந்தது. ஒவ்வொரு படமும் வெளியான போது வெற்றி தோல்வியை விட இந்த சமூகம் இந்தப் படத்தை எப்படி புரிந்து கொள்கிறது, என்னை ஒரு சாதி வெறியன் என்னும் அடையாளத்தை குத்தினார்கள். என் படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சாதியை ஆதரித்து வசனம் இடம் பெற்று இருக்கிறதா? எந்த படத்தில் ஒருவன் என்னை விட கீழானவன் என்று நான் சித்தரித்து இருக்கிறேன்? என்னுடைய படங்களில் பெண் உரிமை உட்பட நிறைய ஸ்டீரியோடைப் விஷயங்களை உடைத்திருக்கிறோம். சமத்துவத்தை பேணுகிற ஒரு சமூகத்தை உருவாக்க எனக்கு ஒரு பெரும் கனவு இருக்கிறது. அந்தக் கனவின் அடிப்படையில் தான் திரைப்படத்தை உருவாக்குகிறேன்” என்றார். 

Bison pa.ranjith
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe