விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

Advertisment

இந்த நிலையில் தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளை பலரும் கண்டித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் பாஜக அரசின் ஆயுதமாக மாறியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருந்தார். காங்கிரஸும் பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தது. திரை பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக வெகுண்டெழுந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித், “ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். 

ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment