சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (25-02-26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித், “ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டத்தின் பாற் ஈடுபாடு கொண்டு, தம் போராட்ட வாழ்வை தொடங்கியவர். இன்று தமிழகம் முழுவதும் இயங்கும் விவசாய சங்கங்கள் உருப்பெறுவதற்கு கடந்த நூற்றாண்டில் அடித்தளமிட்ட தலைவர்களுள் முதன்மையானவர். இன்றைய இந்திய அரசியலானது கடந்த எண்பதாண்டு காலம் நாம் சந்தித்த ஏராளமான போராட்டங்களின் விளைவு. காலனிய ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தை எதிர்த்து தலைமறைவு போராட்டம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம், பல்வேறு தொழிலாளர் நலச் சங்கப் போராட்டம் என அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சாதிய நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து போராடியவர், அப்போராட்டத்தில் தம் குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த பின்னரும் பட்டியல் சமூக மக்கள் பக்கம் நின்றவர்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளராக நெடுநாள் நீடித்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கிய அவரது போராட்ட வாழ்க்கை, பின் இந்திய அளவிலான இடதுசாரி தலைவர்களில் முதன்மையானவராக தொடர்ந்தது. அவரது வாழ்க்கை ஓர் அரசியல் பயணம் மட்டுமல்ல; அது ஒரு நெறிப்பாடம். இன்றைய தலைமுறைக்கு தம் அறநேர்மையான செயல்பாட்டினூடாக ஓர் வழித்தடத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் அவர் என்றும் வாழ்வார். செவ்வணக்கம், தோழர் நல்லகண்ணு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/25/14-68-2026-02-25-17-13-06.jpg)