கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (04.12.2025), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத் தூணில் ஏற்றாமல் வழக்கமாக ஏற்றப்படும் பிள்ளையார் கோயில் அருகில் தீபம் ஏற்றப்பட்டது.
ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்னும் இரண்டு நாட்களில் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளதை அடுத்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உத்தரவிற்கு எதிராகவும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உத்தரவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us