இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக இரு முக்கிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 9ம் நாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைச் சான்று கிடைக்காத காரணத்தினால் வெளியாகவில்லை. அதே சமயம், ஜனவரி 10ம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த, திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "பராசக்தி" படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து அறிவிக்கப்பட்ட அதே தேதியில் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்பாராத, விதமாக சில படங்களும் பொங்கலன்று வெளியாகும் என்ற தகவல்களும் வெளியாகின்றன.
அந்த வகையில் யாரும் எதிர்பாராத விதமாக " வா வாத்தியார்" படம் ஜனவரி 14 அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின்றன. கார்த்திக், சத்தியராஜ், ராஜ்கிரண், ரமேஷ் திலக் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டே (2025) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் நிதி சிக்கல்கள் காரணமாக இன்றுவரை வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற 14-ஆம் தேதி வெளியாகும் என்று, அப்படக்குழு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இப்படம், முழு நீள நகைசுவைத் திரைப்படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் பல்வேறு தடைகளை சந்தித்து வந்த இப்படம், தற்போது வெளியாவது குறித்து படக்குழுவும் மகிழ்ச்சியடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு முக்கிய நடிகர்கள் இடம் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு, மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us