மர்டர் மிஸ்டரி திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு. பெரும்பாலும் இம்மாதிரியான திரைப்படங்கள் தோல்வி அடைவது குறைவு. இதனாலேயே அவ்வப்போது ரெகுலர் இன்டர்வலில் இம்மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. தற்பொழுது அந்த வரிசையில் இணைய மீண்டும் இதே மர்டர் மிஸ்டரி பாணியில் புதுவிதமான ஒரு மெடிக்கல் க்ரைமை முன்னிறுத்தி வெளியாகி இருக்கும் அதர்ஸ் திரைப்படம் முந்தைய படங்கள் போல் வரவேற்பை பெற்றதா, இல்லையா?
ஒரு வேன் விபத்தில் மூன்று பெண்கள் எரிந்த நிலையில் இறந்து கிடக்கின்றனர். இந்த சம்பவத்தை துப்புத் தொலைக்க போலீஸ் அதிகாரியான ஆதித்யா மாதவன் களம் இறங்குகிறார். இறந்தவர்கள் யார் என தேடும் வேளையில் அவர்கள் அனைவருமே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பெண்கள் என தெரிய வருகிறது. அதேபோல் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. குறிப்பாக அனாதை ஆசிரம பெண்கள் ஏன் கொலை செய்யப்பட்டனர்? அவர்களை கொலை செய்தது யார்? தொடர்ந்து அவர்கள் கடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? என்பதே இப்படத்தின் மீதி கதை.
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் தம்பதியினர் இடையே குழந்தையின்மை பிரச்சனை அதிக அளவில் பெருகி வருகிறது. இதனால் தம்பதியினர் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இந்த செயற்கை கருத்தரிப்பு முறையில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் திடுக்கிடும் முறைகேடுகள் என பல்வேறு மெடிக்கல் க்ரைம் நடப்பது இப்பொழுது புதுமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு புதுமையான கதை கருவை கையில் எடுத்துக் கொண்ட இயக்குநர் அதனுள் போலீஸ் இன்வெஸ்டிகேடிவ் மர்டர் மிஸ்டரி திரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்து அதனையும் ரசிக்கும்படி இந்த அதர்ஸ் படத்தை கொடுத்து இருக்கிறார். ஐ வி எஃப் சிகிச்சைகளில் எப்படி எல்லாம் முறைகேடுகள் நிகழ்த்தி அதன் மூலம் மெடிக்கல் க்ரைம் நிகழ்த்தலாம் என்ற திடுக்கிடும் தகவல்களை உள்ளடக்கிய ஒரு மர்டர் மிஸ்டரி படமாக கொடுத்த இயக்குநர் அதை வழக்கமான படமாக இல்லாமல் காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் கூடிய சீட்டின் நுனியில் அமரும்படியான திரில்லர் படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.
படம் ஆரம்பித்து போலீசார் விசாரணை ஒரு பக்கம் மருத்துவமனையில் நடக்கும் ஊழல்கள் இன்னொரு பக்கம் என நான் லீனியர் பாணியில் நகரும் கதை, இரண்டாம் பாதியில் ஒரு புள்ளியில் சந்தித்து அதன் பிறகு பல்வேறு திருப்பு முனைகள் வந்து விறுவிறுப்புடன் கூடிய காட்சிகளுடன் இறுதியில் சோசியல் மெசேஜோடு நிறைவான த்ரில்லர் படமாக முடிந்திருக்கிறது. படம் ஆரம்பித்து எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் சிறப்பாக நகர்ந்து இருப்பது படத்தையும் வெற்றி பெற செய்து கரை சேர்க்க உதவி இருக்கிறது.
நாயகன் ஆதித்ய மாதவன் புதுமுகமாக இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் இப்படத்தில் நடித்திருக்கிறார். போலீசாக மிடுக்கான தோற்றத்தில் வரும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடன் மற்றொரு போலீசாக வரும் அஞ்சு குரியன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அதையும் சிறப்பான முறையில் செய்து இருக்கிறார். நாயகனுடன் படம் முழுவதும் பயணிக்கும் படியாக வரும் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். வழக்கமான நாயகியாக இல்லாமல் கௌரி கிஷன் இப்படத்தில் டாக்டர் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் படத்தோடு ஒன்றி வரும் கதாபாத்திரமாக மாறி அதற்கான நியாயத்தை செய்திருக்கிறார். தேவையில்லாத கதாபாத்திரமாக இல்லாமல் இவரது கதாபாத்திரத்தை கதையோடு பயணிக்க வைத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் முனீஸ் காந்த் ராமதாஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து கவனிக்க வைத்திருக்கிறார். இவரின் நேர்த்தியான நடிப்பு கதாபாத்திரத்திற்கும் மற்றும் படத்திற்கும் நன்றாக வலு சேர்த்து இருக்கிறது. நண்டு ஜெகன் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடன் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகரும் சிறப்பாக நடித்து கவனம் பெற்று அதேசமயம் மிரட்டியும் இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் இன்வெஸ்டிகேட்டிவ் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்து கதை ஓட்டத்திற்கு நன்றாக உதவி இருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கிளிஷேவான காட்சிகள் மூலம் படம் நகர்ந்தாலும் அதன் பிறகு கதை விறுவிறுப்பாக நகர்ந்து இரு வேறு கோணத்தில் பயணித்து இடைவேளைக்குப் பிறகு ஒரு புள்ளியில் கதை சந்தித்து விறுவிறுப்பாக சென்று அதே சமயம் பல்வேறு திருப்புமுனைகளுக்கு இடையே நகர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல மர்டர் மிஸ்டரி திரைப்படமாக இப்படம் அமைந்து அதேசமயம் மைனஸ்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த அதர்ஸ் கொடுத்திருக்கிறது.
அதர்ஸ் - சமூக அக்கறை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/20-11-2025-11-08-10-22-34.jpg)