ஓமன் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்படுத்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்ற சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இது குறித்து பாலிவுட் நடிகை மற்றும் டான்சர் நோரா ஃபதேகி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் மக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இது பலரை வருத்தமடைய செய்ததாக தற்போது இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது நிலைப்பாட்டுக்கு எதிரான ட்ரோல்களை பற்றியும் பேசியுள்ளார்.
ட்ரோல் குறித்து அவர் பேசியதாவது, “நிறைய் பேருக்கு புரிந்து கொள்ளும் திறனும் கவனிக்கும் திறனும் தொலைந்து போய்விட்டது. இது நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் விஷயம். ஆனால் பல பேர் அந்த பள்ளி வாழ்க்கையையே தவிர்த்து விட்டார்கள் போல. குறிப்பாக இப்போது இருக்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஃபோன் காலத்தில்... ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் மூளையை கொண்டு செல்வதில்லை. ஆனால் நான் உலக அமைதியையும் ஒற்றுமையையும் விரும்புகிறேன். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நபரும் உலகின் ஒரு பகுதியாகும். நான் பேசியதில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருந்தால் உங்களை நீங்களே சோதித்து பார்க்க வேண்டும். உங்களிடம் தார்மீக ரீதியாக ஏதோ தவறு இருக்கிறது” என்றார்.
Follow Us