தெலுங்கில் நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருபவர் சிவாஜி. இவர் தற்போது புதிதாக நடித்துள்ள படம் ‘தண்டோரா’. இப்படம் 25ஆம் தேதி வெளியாகிறது. அதனால் ஹைதராபாத்தில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவாஜி, “கதாநாயகிகள், அவர்களுக்கு தோன்றும் விதத்தில் உடையை அணிய வேண்டாம் என அறிவுறுத்துகிறேன். தயவு செய்து புடைவையையோ அல்லது உடலை முழுமையாக மறைக்கும் உடைகளையோ அணியுங்கள். அதில் தான் அழகு இருக்கிறது. மாறாக உடலின் அங்கங்களை காண்பிப்பதில் இல்லை. 

Advertisment

அப்படி அவர்கள் விருப்பத்திற்கு உடை அணிந்து வெளியில் சென்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும். நீங்கள் கவர்ச்சியான உடைகளை அணியும் போது மக்கள் உங்களை பார்த்து சிரிப்பார்கள். உங்களை ஒரு கேவலமான பெண் என்று நினைப்பார்கள். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் நீங்கள் பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசுவீர்கள். கவர்ச்சிக்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும். உங்கள் சுதந்திரம் ஒரு சிறப்புரிமை. அதை இழந்து விடாதீர்கள். ஒரு பெண் இயற்கையை போன்றவள். இயற்கை என்பது அழகாக இருக்கும் போது மதிக்கிறோம். ஒரு பெண் என் தாயைப் போன்றவள். அவரை நான் எனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கிறேன்” என்றார். 

Advertisment

இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு எதிராக நடிகர் மஞ்சு மனோஜ் உள்ளிட்ட சில திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இயக்குநர் நந்தினி ரெட்டி, நடிகை சுப்ரியா, தயாரிப்பாளர் சொப்னா, நடிகை லட்சுமி மஞ்சு மற்றும் நடிகை ஜான்சி லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட நடிகைகள் ஹைதராபாத்தில் உள்ள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் (MAA) புகார் அளித்தனர். அவர்கள், சிவாஜி கூறியது பிற்போக்குத்தனமான ஆணாதிக்க கருத்துகள் என்று கண்டித்தனர். மேலும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இதை தொடர்ந்து நடிகர் சிவாஜி பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய நோக்கம் நல்ல விதம்தான் என்றும் ஆனால் தான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானது என்றும் விளக்கமளித்திருந்தார். இந்த மன்னிப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக வரும் 27ஆம் தேதி சிவாஜி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் சர்ச்சை தொடர்பாக சிவாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சமீபத்தில் ஒரு மாலில் நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் சிக்கிய சம்பவத்தை மேற்கோள் காட்டினார். இது குறித்து பேசிய அவர், “அந்த மால் சம்பவத்தில் பாவம் நிதி அகர்வால். அவருடைய உடை ஏதேனும் ஒன்று விலகியிருந்தால் அது வீடியோவாக வாழ்நாள் முழுவதும் இருக்கும் அல்லவா? அந்த ஒரு சம்பவம் என்னை தூண்டியது. நிதி அகர்வால் மிகவும் சங்டத்துடன் அந்த காரில் ஏறி சென்றார்” என்றார். நிதி அகர்வால் அந்த நிகழ்ச்சியில் சேலை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை தொடர்ந்து சமந்தா கூட்ட நெரிசலில் சிக்கியது குறித்தும் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “சமந்தா சிக்கியதையும் பார்த்தேன். அதில் அவர் புடவை அணிந்திருததால் அவர் சங்கடமாக தெரியவில்லை. அதனால் பாதுகாப்புக்காக பெண்கள் வெளியே செல்லும்போது கண்ணியமான ஆடைகளையோ அல்லது சேலையையோ அணியுங்கள் என்றுதான் நான் சொன்னேன். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு நான் யார்? யாரையும் நான் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, ஆனாலும் மக்கள் என்னை விமர்சிக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார். 

இதனிடையே நிதி அகர்வாலுக்கு சிவாஜிக்கு பதிலளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டுவது திசை திருப்புவதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.