ஹாலிவுட்டில் 102 வருடங்கள் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனம்
வார்னர் பிரதர்ஸ். இந்நிறுவனம் படத் தயாரிப்பு, வெளியீடு, வெப் சீரிஸ்கள், ஓடிடி தளம் என இன்னும் ஏகப்பட்ட படைப்புகளை கொடுத்து புகழ்பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த ஜூனில், தங்களது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட பிரிவையும் அதோடு ஸ்ட்ரீமிங் பிரிவையும் இரண்டு தனித்தனி பொது வர்த்தக நிறுவனங்களாகப் பிரிக்க முடிவெடுத்தது. இத்திட்டத்தை கடந்த ஜூனில் அந்நிறுவனம் அறிவித்த நிலையில் அதைக் கைப்பற்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டது. இந்த போட்டியில் தற்போது நெட்பிக்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்த அறிவிப்பை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒப்பந்த அறிவிப்பில் ரூ.7.44 லட்சம் கோடிக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வார்னர் பிரதர்ஸ் தயாரித்த திரைப்படங்கள், எச்பிஓ மேக்ஸ் ஒடிடி தளம், ஸ்டூடியோக்கள் அனைத்தும் நெட் ஃபிளிக்ஸ் வசம் செல்கிறது. இதில் முக்கிய படைப்புகளான ‘தி பிக் பேங் தியரி’, ‘தி சோப்ரநோஸ், மற்றும் உலக புகழ்பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ சீரிஸ், ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி சூப்பர் ஹீரோ படங்கள் ஆகியவைகள் அடங்கும். இந்த ஒப்பந்தத்திற்கான பணப் பரிவர்த்தனை இன்னும் 12 முதல் 18 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் திரைத்துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
Follow Us