கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் நாயகன். முக்தா பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. கேங்க்ஸ்டர் படங்களில் ஒரு மைல்கல் படமாக இப்படம் தமிழ் சினிமாவில் அமைந்துள்ளது. மேலும் இந்தியா சார்பில் 60வது ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.
இந்தப் படம் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்ஆர்பில் பேக்டரி நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்ஆர்ராஜன் என்பவர் கொடுத்த மனுவில், ‘நாயகன் படத்தை எனது நிறுவனம் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2023ஆம் ஆண்டு படத்தை வெளியிடும் உரிமையை பெற்றது. இதை மறைத்து விஎஸ்ஃபில் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளது. இது முறைகேடான நடவடிக்கை. அதனால் நாயகன் ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ரீ ரிலீஸ் மூலம் வசூலான தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என் செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு பட ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். இதனிடையே வாதத்தின் போது நீதிபதி செந்தில்குமார் நாயகன் படத்தை 16 முறை பார்த்துள்ளதாகவும் காட்சி வாரியாக ஒவ்வொன்றையும் தன்னால் இப்போது சொல்ல முடியும் என்று கூறினார். இது கமல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
Follow Us