இயக்குநர் இரா.சரவணன், எழுதிய ‘சங்காரம்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நக்கீரன் ஆசிரியர், நடிகர்கள் சசிகுமார், சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், “சரவணன் எங்களுக்கு போட்டி பத்திரிக்கையான ஜூனியர் விகடனில் வேலை பார்த்ததால் அவரை எதிரியாகவே பார்த்தேன். ஒருமுறை அவரை வைத்து என் அலுவலகத்தில் சண்டையே நடந்தது. திகார் ஜெயிலில் கனியை சந்தித்து அவர் எடுத்த பேட்டியை பார்த்து என் அலுவலக அசோசியேட்டிடம் சத்தம் போட்டேன். நாங்கள் வாஜ்பாயை பேட்டி எடுத்திருந்தோம். ஆனால் இதை விட்டு விட்டோமே என ரொம்ப யோசித்தேன்.
இந்த பேட்டியில் சிறையில் கனி படும் கஷ்டத்தை அழகாக எழுத்தில் கொண்டு வந்திருந்தார். கலைஞர் அந்த பேட்டியை படித்துவிட்டு இரண்டு நாள் தூங்கவில்லை என சொன்னார்கள். இந்த புத்தக டிசைனை பார்க்கும்போது பயங்கர ரத்தமாக இருந்தது. நானும் ஒரு லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் என்பதால் சம்பந்தப்பட்ட லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டிடம் அது குறித்து கேட்டேன், அவர், புத்தகம் உள்ளே போய் பாருங்க, முழுக்க முழுக்க ரத்தமாத்தான் இருக்கும் என சொன்னார். பின்பு உள்ளே போய் படித்து விட்டு டெல்டா பகுதி என குறிப்பிட்டிருந்ததும், மணல்மேடு சங்கரை தழுவி எழுதி இருக்கிறாரா எனக் கேட்டேன், ஆமாம் என்றார். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என சொல்வார்கள் அது போல இந்த புத்தகம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “சரவணனுக்கு அவரது மனைவி பக்கபலமாக இருக்கிறார். சம்பாதித்து சாப்பாடு போடுவதற்கு அப்படி ஒருவர் இருந்தால் தான் சினிமாவில் இப்படி உலாவ முடியும். புத்தகம் கொடுப்பதில் சரவணன் ஓரவஞ்சனை செய்திருக்கிறார். எனக்கு லேட்டாகத்தான் புத்தகம் கொடுத்தார். அதே போல் அக்கா தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் நேத்துதான் புத்தகம் கொடுத்திருக்கிறார். அவங்க எந்திரன் ரஜினி போல வேகமாக படித்து முடித்து விடுவாங்க” என நகைச்சுவையாக பேசினார்.
Follow Us