Advertisment

“சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள்” - மிஷ்கின்

75

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘மைலாஞ்சி’. ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.

Advertisment

திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள‌ இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.

Advertisment

நிகழ்வில், இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் அஜயன் பாலா பேரன்பு மிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர்.‌ நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.‌ 

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷ‌யம் இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.‌ தயாரிப்பாளர் நட்பை பற்றி குறிப்பிட்டார் வேறு துறையில் நட்பு இருக்கிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் சினிமா துறை போல் நட்பை போற்றும் ஒரு துறை கிடையாது. தான் கண்டறிந்த விஷ‌யத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆசை. தான் கஷ்டப்பட்டு சிறுக சேகரித்த ஒரு விசயத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும் என்பது ஒரு தயாரிப்பாளரின் ஆசை. சினிமாவை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அது ஆக சிறந்ததாகவே இருக்கிறது. இதற்கு நட்புதான் அடித்தளம். சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம். 

இந்தத் திரைப்படம் மிக முக்கியமான படம். கதாசிரியனும் இந்த சமூகத்திற்கான மனநல மருத்துவன் தான். நல்ல படங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு தெரபி, சமூகத்திற்காக இப்படி சிந்திக்கும் தெரபிஸ்ட்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷ‌யத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் -  கதாசிரியர் ‍& இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்-  என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும். 

எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன‌.‌ ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன‌. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள்.‌ இது என்னுடைய கணிப்பு” என்றார். 

mysskin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe