தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு காதல் திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில படங்கள் வெற்றி பெற்றும் சில படங்கள் தோல்வியும் பெறுகிறது. தற்பொழுது வெளியாகி இருக்கும் மயிலாஞ்சி இதில் எந்த வரிசையில் இணைகிறது என்பதை பார்க்கலாம்...

Advertisment

நாயகி க்ரிஷா குரூப் சித்தி கொடுமையால் தவிக்கிறார். சித்தி எப்படியாவது தன் குடிகார தம்பிக்கு இவரை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க நாயகி க்ரிஷா குரூப் தன்னுடைய நண்பன் அறிவுரை பேரில் அந்த ஊரில் இருக்கும் ஒரு இன்ஜினியரை காதலிக்கிறார். அவரிடம் தன் காதலை சொல்லி சென்னையில் செட்டில் ஆகிவிடலாம் என எண்ணும் நேரத்தில் அந்த நபர் சென்னைக்கு சென்று விடுகிறார்.

Advertisment

அந்த நேரம் பார்த்து ஊட்டியில் வைல்டு லைஃப் போட்டோகிராபி எடுக்க வரும் ஸ்ரீராம் கார்த்திக் நாயகியியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். ஆனால் நாயகியோ தன்னை தன் காதலனிடனும் சேர்த்து வைக்க ஸ்ரீராம் கார்த்தியிடமே உதவி கேட்கிறார். அவரோ தன் காதலை மறைத்துக் கொண்டு நாயகிக்கு உதவி செய்கிறார். அந்த நேரம் பார்த்து நாயகியும் ஸ்ரீராம் கார்த்தி மேல் காதல் வயப்படுகிறார். அந்த சமயத்தில் சென்னையில் இருக்கும் இளைஞர் மீண்டும் ஊட்டிக்கு வர இவர்களுக்குள் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் அந்த நேரம் காட்டுக்குள் செல்ல அங்கு தீ விபத்து ஏற்பட்டு அதில் மாட்டிக் கொள்கிறார். இதைத்தொடர்ந்து நாயகி யாரை கரம் பிடித்தார் என்பதே? இப்படத்தின் மீதி கதை. 

39 (1)

1980 களில் வந்த பல்வேறு காதல் திரைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில் அப்படியான ஒரு கதை அமைப்பைக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட பாலுமகேந்திரா பட பாணியில் இயற்கை படம் போல் ஒரு கதைக்கருவை கொண்டிருக்கும் இப்படம் அதே பழைய பாணியில் உருவாகியிருப்பது சற்றே அயற்சியை உண்டாக்குகிறது. படம் ஆரம்பித்து சிறிது நேரம் கலர்ஃபுல்லாக சென்றாலும் போகப்போக காதல் காட்சிகளுக்குள் புகுந்து அப்படியே படம் பயணித்து இறுதி கட்ட காட்சிகளில் சற்றே பதட்டத்தை கூட்டி ஒரு நிறைவான கிளைமேக்ஸ் ஆக முடிகிறது. படம் ஆரம்பித்து சில இடங்களிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சில இடங்களிலும் காட்சிகள் ஆறுதலாக அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது. மற்றபடி படத்தில் வேற எந்த ஒரு இடத்திலும் அழுத்தமும் திருப்புமுனைகளும் இல்லை. நாம் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிய கதையாக இருந்தாலும் இன்னும் கூட சிறப்பாக எடுத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும். திரைகதையில் மற்றும் கதைக் கருவில் இருந்த பலவீனத்தை சற்று சரி செய்திருக்கலாம். 

Advertisment

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் ஓரளவு நல்ல பங்களிப்பு கொடுத்திருக்கிறார். நாயகி க்ரிஷா குரூப் வெகுளியான பெண்ணாக நடித்து கவர்ந்திருக்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் தேவையோ அதை நிறைவாக கொடுத்து இருக்கிறார். காமெடிக்கு பொறுப்பேற்ற சிங்கம் புலி பல இடங்களில் நம்மை சோதிக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்திருக்கிறார். முனீஷ்காந்த் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியவில்லை. மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

செழியன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். மலை மற்றும் அதை சார்ந்த விஷயங்களை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். இளையராஜா இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. இசைஞானிக்கு இன்னமும் தீனி தேவைப்படுகிறது. 

காலம் எவ்வளவு வேகமாக ஓடி பல விஷயங்களை தாண்டி வந்த இந்த சூழலில் இன்னமும் அந்த காலத்து கதையம்சம் கொண்ட படங்களை அதே போன்று ஒரு திரைக்கதை அம்சத்துடன் எடுத்திருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்க மறுக்கிறது. அதை இயக்குநர்கள் சற்றே மனதில் வைத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கும் பட்சத்தில் அந்த திரைப்படம் நன்றாக வரவேற்பை பெறும். 

மைலாஞ்சி - வீரியம் இல்லை!