சமீபத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர், இருவரும் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இதனை சீதா ராமம் 2 பட புகைப்படம் என்றும் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது. ஆனால் அது ஒரு ஆல்பம் பாடலுக்கான புகைப்படம் என்று கடந்த 2ஆம் தேதி தெரிய வந்தது. அன்றைய தினம் இருவரும் நடித்த ‘பீகி பீகி’ எனும் ஆல்பம் பாடல் வெளியானது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் அவரது மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் ஜஸ்லீன் ராயல் இணைந்து பாடியுள்ளனர். இர்ஷாத் காமில் எழுதியுள்ளார். இந்த ஆல்பம் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்பாடல் தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய மிருணாள் தாக்கூர், காதல் குறித்து தனது கருத்தை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “காதல் ஒரு அழகான உணர்வு. இந்த உலகில் அனைவருக்கும் அது நிகழ வேண்டும். காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றும். அதனால் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் உள்ள காதலைக் கண்டறிய வேண்டும். காதலில் முக்கியமானது, அன்பை பெற்றுக்கொள்வதும் கூட. சில நேரங்களில், அன்பைப் பெறுவதும், அதை அங்கீகரிப்பதும் மிகவும் கடினமாக இருக்கிறது. காதலின் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது, காதல் வரும்போது, ​​நீங்கள் அந்த நபருக்காக எல்லாவற்றையும் செய்வீர்கள். நீங்கள் உங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவீர்கள்” என்றார்.
சமீப காலமாக தனுஷுடன் மிருணாள் தாக்கூர் காதலில் இருப்பதாக தகவல் உலா வந்தது. ஆனால் அதனை அவர் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us