தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவ்விருது வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அனைவருக்கும் விருதுகளோடு சான்றிதழும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு ரூ.1.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Follow Us