தமிழ் சினிமாவில் 90 களில் இருந்து தற்போது வரை முன்னணி இசையப்பாளராக இருந்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசை நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்கள் வரையிலும் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. இசையில் பெருமளவு ரசிகர்களை தன் வசம் ஈர்த்த ரஹ்மான் "இசைப்புயல்" என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அதே 90 களின் காலகட்டத்தில் மிக முக்கிய நடிகராக இருந்தவர் பிரபுதேவா. இவரது நடிப்பு மட்டுமல்லாமல் நடனமும் இவருக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தன. இதனால் இவரை "நடனப்புயல்" என்றும் அழைத்து வருகின்றனர். இவர் ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு நடன பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர்களின் கூட்டணியில் அப்போது வெளிவந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பிரபலமாகி இருந்தன.
அதன் பிறகு சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தலை காட்டாத பிரபு தேவா, தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிசியாகிவிட்டார். இருப்பினும் அவ்வப்போது தமிழ் திரையில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கியதுடன், சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது "மூன்வாக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். நடனப்புயலும், இசைப்புயலும் இணையும் இந்த படம் மாபெரும் வெற்றியடையும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘லஹரி மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. "மூன்வாக்" இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாகப் பாடினர். அதனால் இந்த விழா ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த நிகழ்ச்சியை அனைவரும் ரசிக்கும்படியான இசைக் கொண்டாட்ட நிகழ்ச்சியாக மாற்றியது. மற்றக் கலைஞர்களும் இந்த விழாவில் நடனமாடி விழாவை மேலும் உற்சாகமாக மாற்றினர். இறுதியாக பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை (ஜனவரி 06) கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/a-2026-01-06-10-52-39.jpeg)