மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், சமீபத்தில் இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். இதன் மூலம் இந்த விருதை வாங்கும் முதல் மலையாள நடிகர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக மலையாள மூத்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வாங்கியுள்ளார். இதுவரை இரண்டு பேர் மலையாளத் திரைத்துறையில் இருந்து இந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். 

Advertisment

மோகன்லாலுக்கு விருது வாங்கியது தொடர்பாக அண்மையில் கேரள அரசு பாராட்டு விழா எடுத்து சிறப்பித்தது. இந்த நிலையில் மோகன்லால் தான் பெற்ற விருதுக்காக டெல்லியில் ராணுவ தளபதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மோகன்லால், நடிகர் என்பதை தாண்டி இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாகவும் உள்ளார். திரைப்படங்களில் இராணுவத்தை பெருமைப்படுத்தும் வகையிலும் பிரபலப்படுத்தும் வகையிலும் நடித்ததற்காக இந்த கௌரவப் பதவி அவருக்கு 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில், தான் வகிக்கும் பதவிக்கு உண்டான இராணுவ உடையிலே டெல்லிக்கு சென்று பணி தொடர்பான விஷயங்களை விவாதிக்க இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியைச் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு இராணுவத்தில் தனிப்பட்ட வீரம் அல்லது சிறப்புமிக்க சேவைக்காக வழங்கப்படும் பாராட்டு சான்றிதழான ‘கமெண்டேஷன் கார்ட்’(Commendation Card) வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “ராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம். இதற்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்றதும் ஒரு காரணம். இது சகோதரத்துவத்திற்கான மரியாதையும் கூட. கடந்த 16 ஆண்டுகளாக நானும் இந்த சகோதரத்துவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்” என்றார்.