மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், கடந்த வருடம் இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். இது தொடர்பாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா எடுத்து சிறப்பித்தது. இவர் நடிகர் என்பதை தாண்டி இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாகவும் உள்ளார்.
இந்த நிலையில் கேரள அரசின் போக்குவரத்து கழகத்தின் விளம்பரத் தூதுவராக மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மோகன்லால் எந்த ஊதியமும் இல்லாமல் விளம்பரங்களில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் திறமையான இயக்குநர்களை வைத்து இந்த விளம்பரங்களை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரள அரசு மொத்தம் 4,952 பேருந்துகள் இயக்கி வந்த நிலையில் அதன் மூலம் ரூ.12.18 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. அதனை முன்னிட்டு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மோகன்லால், தற்போது ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 3, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ‘பேட்ரியாட்’ மற்றும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Follow Us