மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனா அதே நாளில் மங்காத்தா படமும் ரீ ரிலீஸானது. இதனால் தன் படம் கவனம் பெறவில்லை என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரெளபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.
மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள். திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனக்கு மக்களே துணை. மக்களே முடிவு செய்யட்டும். என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us