திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார். நாயகனாக அதே ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். மேலும் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தில் இருந்து ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘எம்கோனே’ பாடல் முன்னதாக வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. அதாவது, சாதியவாதி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மோகன் ஜியின் படத்தில் பெண்ணுரிமை பேசும் சின்மயி, பாடல் பாடுவதா என்று விமர்சிக்கப்பட்டது. இதனால் சின்மயி எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டார். மேலும், இது சாதிய படம் என்று தெரிந்திருந்தால், ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன் என்றும் என்னுடைய கொள்கைக்கும் இதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்றும் என் சித்தாந்தத்துக்கு பொருந்தாததால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.  

Advertisment

சின்மயின் மன்னிப்புக்கு பதிலளித்த மோகன் ஜி, தன்னிடமோ, இசையமைப்பாளரிடமோ எந்த விளக்கமும் கேட்காமல் சின்மயி இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், என்னுடைய எந்த சித்தாந்தத்தில் அவருக்கு வேறுபாடு எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் எதற்காக வருத்தம் தெரிவித்தார் என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் பதிவை நீக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டிருந்தார். 

இந்த நிலையில் புரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ள மோகன் ஜி, செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அவரிடம் சின்மயி பாடல் விவகாரம் தொடர்பாக, படத்தில் அந்த பாடல் இடம்பெறுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கண்டிப்பாக படத்தில் அந்த பாட்டு இருக்கும். ஆனால் அவர் குரலில் இருக்காது. அவருக்கு பதில் வேறொரு பாடகி குரலில் வரும். போன வாரம் வரை சின்மயின் பதிலுக்காக டைம் கொடுத்திருந்தேன். இயக்குநர் சங்கத்திலும் புகாரும் கொடுத்திருக்கிறேன். அதே போல் தயாரிப்பாளரும் அவரது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எங்க படத்தை எந்த முகாந்திரமும் இல்லாமல், பொதுவெளியில் கலங்கம் ஏற்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். இரண்டு புகாருமே ஃபெப்சிக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக சின்மயிடம் ஃபெப்சி கேள்வி கேட்டிருக்கிறது. நடவடிக்கைக்கான நேரம் அதிகமாக எடுக்கிறது” என்றார்.

Advertisment