தெலுங்கில் மூத்த நடிகராக இருக்கும் மோகன் பாபு, 1996ஆம் ஆண்டு ஸ்ரீ வித்யாநிகேதன் பொறியியல் கல்லூரியை தொடங்கினார். இது 2022ஆம் ஆண்டு ‘மோகன் பாபு பல்கலைக்கழகம்’ என மேம்படுத்தப்பட்டது. இது ஆந்திராவில் புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருப்பதியில் இருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் 2022ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2024ஆம் ஆண்டு வரை மாணவர்களிடமிருந்து கூடுதலாக ரூ.26.17 கோடி அளவுக்கு கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர பெற்றோர் சங்கம் மூலம் வெளிவந்தது. 

Advertisment

குற்றச்சாட்டுத் தொடர்பாக ஆந்திர மாநில உயர்கல்வி ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதில் பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தது உத்தரவிட்டது. மேலும் அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் மாணவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் எனவும் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக மோகன் பாபு தரப்பில் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆணையத்தில் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

37
மோகன் பாபு

இந்த நிலையில் முன்பு நடந்த குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அதற்கு விதிக்கப்பட்ட அபாரதத் தொகை குறித்தும் தற்போது ஆணையத்தின் இணையதளத்தில் பொதுவெளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பல்கலைக்கழக உரிமத்தை ரத்து செய்யக் கோரி அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் மோகன் பாபுவின் மகனுமான விஷ்னு மஞ்சு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் “ஆணையகத்தின் நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அது வெறும் பரிந்துரை மட்டுமே. அவர்களின் நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தடை உத்தரவை மீறி இந்த விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. 

பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க ஊடகங்களில் சிலர் இப்படி தகவல்களை கொடுக்கின்றனர். பெற்றோர்களும் பொதுமக்களும் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். விசாரணையின் போது பல்கலைக்கழக குழு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், எந்த தவறும் நடக்கவில்லை என்பதையும் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment