தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தின் மூலமாக சிறப்பான திரைப்படங்களை நமக்குக் கொடுத்தவர் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் மின்னலே படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் கடந்த 2001 ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதலிருந்தே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் மாதவன், அப்பாஸ், ரீமாசென், விவேக், நாகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  

Advertisment

காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருக்கப்பட்டிருந்தது. அப்போதைய இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பரவியிருந்தன. மின்னலே படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இவருக்கு இது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசை, கதைக்களம், நடிப்பு என அனைத்து வகையிலும் பாராட்டத்தக்க அளவில் அமைந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்தது. 

Advertisment

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அண்மைக் காலங்களில் பெரும்பாலான படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், 25 ஆண்டுகளைக் கடந்துள்ள மின்னலே படமும், இந்த மாதத்தில் வருகின்ற 13ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் ஏற்கனவே இளைஞர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது காதலர் தினத்தையொட்டி இப்படம் மறுவெளியீடு செய்ய இருப்பதால் மீண்டும் பெரிய வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.