மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது
இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாரி செல்வராஜ், “பத்திரிக்கையாளர்கள்கிட்ட ஒரு வேண்டுகோளாக சொல்றேன். ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? அப்படின்ற கேள்வியை இனிமே தவிர்த்துடுங்க. அது என்னை ரொம்ப பாதிக்குது. என்னை மட்டும் இல்ல, என்னுடைய வேலையையும் நரேட்டிவையும், சிந்தனையையும் சேர்த்து பாதிக்குது. நீங்க கேட்ட மாதிரி நானும் உங்களை திருப்பி கேட்க முடியும். ஆனா அப்படி கேட்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படி கேட்டா உங்களுக்கும் எனக்கும் முரண் வந்துடும். அது வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் கூடி வாழனும்னு ஆசைப்படுறேன்.
இதுக்கு அப்புறமும் திருப்பி அந்த கேள்வியை நீங்க கேட்டீங்கன்னா நான் இன்னும் அதிகமா வேலை செய்வேன். எக்காரணத்தை கொண்டும் என்னுடைய கலையை என்னுடையை அரசியலை யாராவது புடுங்க ட்ரை பண்ணுனா, நான் மூர்க்கமா சண்டை போடுவேன். அந்த மூர்க்கம் நானே எதிர்பார்க்காத மூர்க்கம். நான் அப்படி போகக் கூடாதுன்னு நம்புறேன். நீங்க எல்லாரும் என்னை நேசிக்குறீங்கன்னு தெரியும். அதனால தயவு செஞ்சு அந்த கேள்வியை தவிர்த்துடுங்க. மாரி செல்வராஜ் படம்னா அது இருக்கும். அதற்காகத் தான் மாரி செல்வராஜ் கிளம்பி வந்தவன். உங்க மொழியில நான் எடுக்குறது சாதி படம். ஆனா என்னோட மொழியில நான் எடுக்குறது சாதிய எதிர்ப்பு படம். அந்த எதிர்ப்பு படத்தை நான் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பேன்.
நான் இதை திமிரில் சொல்லவில்லை. எமோஷனலா சொல்றேன். நான் எப்பவுமே கலை வடிவத்தை நம்புறேன். நான் அரசியல்வாதியோ, கட்டுரையாளரோ, ஆய்வாளரோ கிடையாது. என் வாழ்க்கையை பனையமா வச்சு படம் எடுத்துட்டு இருக்கேன். என்னோட கலைக்கு ஒரு வெறி இருக்கு. என்னோட கலைக்கு ஆற்றாமை இருக்கு. என் கலைக்கு ஒரு கண்ணீர் இருக்கு. என் கலைக்கு சில கேள்விகள் இருக்கு. என் கலைக்கு பயங்கரமான காதல் இருக்கு. இது எல்லாத்தையும் ஒன்னா சேத்து உங்களுக்கு படமா கொடுத்துட்டு இருக்கேன். ஒரு வருஷத்துக்கு 300 படங்கள் வருது. அதுல கொண்டாட்டம் குதுகலப்படுத்தகூடிய படங்கள் எவ்வளவோ வருது. என்னைய விட்டுடுங்க. ஏன் என்னைய போட்டு அந்த கூட்டத்துல கலக்க ட்ரை பண்ணுறீங்க? உங்களுக்கு பார்க்க பிடிக்கலைன்னாக் கூட பரவாயில்ல, தயவு செஞ்சு நான் உருவாக்கி கஷ்டப்பட்டு கத்துக்கிட்ட என்னோட வாழ்வியல் அனுபவத்தை நீங்க முடிவு பண்ண முயற்சிக்காதீங்க. மத்தபடி இதெல்லாம் பண்ணா கூட, ஏதோ ஒரு வகையில நீங்க என்னை ஏத்துக்கிட்டீங்க. அந்த ஒரு பெரிய பொறுப்பும் நம்பிக்கையும் இருக்கு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தமிழ் சமூகத்துக்கு முன்னாடி மாரி செல்வராஜ் என்கிற நான் நன்றியை சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்றார்.
Follow Us