விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளை பலரும் கண்டித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் பாஜக அரசின் ஆயுதமாக மாறியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருந்தார். காங்கிரஸும் பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தது. திரை பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக வெகுண்டெழுந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us