மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பட வெற்றி தொடர்பாக மனத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியர் தங்கராஜை மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து நன்றிக் கூறினார்.
இந்த நிலையில் படக்குழுவினர் தியேட்டர் விசிட் அடித்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் மாரி செல்வராஜ், துருவ், அனுபமா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றிருந்தனர். அப்போது அவர்களை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதே சமயம் சில ரசிகர்கள் ஆட்டம் ஆடியும் விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். இதனைப் பார்த்து கோபமான மாரி செல்வராஜ் அவர்களிடம் கோபமாக பேசினார்.
அவர் பேசியதாவது, “நீ கத்துறதுக்கு, உனக்கு நான் மது கொடுக்கல. நான் உனக்கு கொடுத்தது புத்தகம். என்னோட சினிமாவை நீ புத்தகமா படிக்கனும்னு ஆசைப்படுறேன். அதனால மது குடிச்ச மாதிரி ஆடாதீங்க. சந்தோஷமா இருங்க” என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கினார்.