சென்னை திருத்தணியில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகர சம்பவம், தமிழ் நாடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையுமே உலுக்கியுள்ளது. திருத்தணியில் ஓடும் ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி அத்துமீறி இருக்கின்றனர். அதை அந்த இளைஞர் விரும்பாத நிலையில், ரயில் நின்றவுடன் போதையில் இருந்த நான்கு பேரும் அந்த இளைஞரை ஆள் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞரை சுற்றியிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 

Advertisment

இந்த விஷயம் தீயாய் பரவிய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, பிறந்த ஊரை விட்டு பிழைப்பிற்காக வந்துள்ள தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை அனைவரும் கண்டித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்  " சென்னை மின்சார இரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும், சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை போன்ற கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.