திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் உள்ள தேநீர் கடைக்கு வெளியே நேற்று (02.03.2026) இரவு சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல், தேர்நீர் கடை மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அரிவாளால் கண்மூடித்தனமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் ஜான் மார்க் (வயது 50) என்ற மாற்றுத்திறனாளி மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் என இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன் மற்றும் சசிகுமார் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து 6 பேரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கஞ்சா போதையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், இது சாதிய மோதல் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, தவெக தலைவர் விஜய் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பெரும் வேதனையை இச்சம்பவம் நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us