பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவினை மாரி செல்வராஜின் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகாசியில் நடந்த இவ்விழாவில் மாரி செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, “நான் எந்த மாதிரியான அரசியலை பேசுகிறேன் என்பதை புரிந்து கொண்டு என்னை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். நான் அம்பேத்கரிய மார்க்சிய பெரியாடிய கொள்கைகளை பேசுபவன். நான் சாதிக்கு எதிரானவன். அதனால் நீங்கள் வேறு எதையாவது எதிர்பார்த்து என்னிடம் வந்தால் ஏமாறுவீர்கள்.
சாதி ஒழியுமா என கேட்டால் எனக்கு தெரியாது. ஆனால் சாதியை எதிர்த்தான் என்ற பெயரில் மாரி செல்வராஜ் இறந்து போவான். ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால் சாதியை எதிர்த்துதான் செயல்படுவனே தவிர அதை ஆதரிக்க மாட்டேன். எனது சமூகத்தைக் காட்ட வேண்டிய கடமை இருந்தாலும்கூட மானுட சமூகத்தின் மீது பேரன்பை நிலைநாட்டுவதுதான் முக்கியம்” என்றார்.
Follow Us