மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் நாளை(17.10.2025) தீபாவளையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் இன்பன் உதயநிதியை நீங்கள் அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் வெளியான தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. உதய் சார் எனக்கு நெருக்கம். அவருடன் பழகுவேன், பேசுவேன் அடிக்கடி சந்திப்பேன். மாமன்னன் பண்ணும் போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் எனக்கு ஒரு கமிட்மெண்ட் இருக்கிறது. அவ்வளவுதான். அது இன்பன் உதயநிதியை வைத்து எடுப்பேனா என்பது தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய அடுத்த படமான தனுஷ் சாரின் படமே ஒன்றில் இருந்து ஒன்றரை வருடம் ஆகும்.
தனுஷ் படத்தை முடித்தவுடன் என் கதையை நம்பி அவர்கள் கேட்டால் அதற்கான நேரமும் எனக்கு அமைந்தால் நான் இன்பன் உதயநிதியை இயக்குவது நடக்கத்தான் செய்யும்” என்றார். இன்பன் உதயநிதி தனுஷின் இட்லி கடை படத்தை தமிழகத்தின் வெளியிட்டதின் மூலம் விநியோகஸ்தராக திரைத்துறையில் அறிமுகமானார். இப்போது அவர் நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுதொடர்பான வீடியோவும் சமுக வலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.