பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் நெல்லையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்த அவர், “நான் என் ஊரை விட்டு ராம் சாரிடம் சென்ற போது, ஏன் ஊரை விட்டு வந்தாய் என கேட்டார். அதற்கு நான் எனக்கு தெரிந்ததை சொன்னேன். அதற்கு அவர், இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய் என்றால் ஊரின் மீது வெறுப்பு இருக்கும் அல்லவா, அதை பற்றி சொல் என்றார். அந்த தருணத்தை பயன்படுத்தி எனக்கு விழுந்து அடிகளை சொன்னேன். அப்போது என்னிடம் அழிக்க முடியாத நினைவுகளையும் வரலாறுகளையும் இருக்கிறது என்பதை ராம் சார் புரிந்து கொண்டார்.
மேலும் மிகப்பெரிய வலியோடும் மிகப்பெரிய வேதனையோடும் இதுவரை சொல்லப்படாத ஒரு வாழ்க்கையை இவன் எடுத்து வந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார். இதை எப்படி வெளியில் சொல்வாய்? எனக் கேட்டார். நான் தெரியல சார் என்றேன். அப்போதுதான் அவர் எனக்கு பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய புத்தகத்தை கொடுத்தார். அந்த புத்தகம் என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது. அதன் பிறகு பேய் மாதிரி படிக்க ஆரம்பித்தேன். பின்பு ராம் சார் மதுரைக்கு என்னை அனுப்பி வைத்து முழு நேரமும் புத்தகத்தை படிக்க சொன்னார். நானோ என்னடா சினிமாவுக்காக சென்னைக்கு வந்தால் இவர் திரும்பவும் மதுரைக்கே அனுப்புகிறாரே என்று யோசித்தேன். இருந்தாலும் மதுரைக்கு வந்து ஒரு ஆறு மாதம் முழுக்க முழுக்க புத்தகத்தையே படித்தேன்.
அதன் பிறகு மனிதர்களிடம் நான் படித்த புத்தகங்களை பற்றி பேச ஏங்கினேன். பின்பு ராம் சாரிடம் போனேன் அப்போது அவர் உன் கதையை சொல்லு என்றார் அப்போது அவரிடம் சொன்ன சொன்ன கதை தான் வாழை. இதைத் தான் முதல் படமாக எடுக்கப் போகிறேன் என சொன்னேன். அதற்கு அவர் இது அதற்கான படம் இல்லை என்றார். ஏன் என கேட்ட போது மாரி செல்வராஜ் என்பவன் யார் என்று தெரிந்த பின்பு தான் இந்த படம் மக்கள் பார்க்க வேண்டும் என சொல்லி வேறொரு கதையை ரெடி பண்ண சொன்னார். அப்போது எழுதிய கதை தான் பரியேறும் பெருமாள்.
நான் புத்தகம் எழுதிய பிறகு எங்கிருந்தோ ஃபோன் வரும். ஆனால் திருநெல்வேலியில் இருந்து எந்த ஃபோனும் வந்ததில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. முதலில் ராம் சார், என்னை படம் பண்ண சொன்ன போது எனக்கு எழுத்து பிடித்திருக்கிறது இதிலே இருந்து விடுகிறேன் என்றேன். உங்க ஊரில் புத்தகம் படிப்பார்களா என கேட்டார். அதை விட சினிமா பார்ப்பார்கள் என்றேன். அப்போது அவர்களுக்கு உன் கதை தெரிய வேண்டும் என்றால் அவர்கள் அதிகம் பார்க்கும் சினிமா மூலம் சொல் என்றார். அதன் பிறகு தான் சினிமாவுக்குள் வந்தேன். திருநெல்வேலி மக்கள் அதிகம் புத்தகம் படித்திருந்தால் சினிமாவுக்குள் வந்திருக்க மாட்டேன்” என்றார்.
Follow Us