மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கதை உருவான விதம் பற்றி கூறினார். அவர் பேசுகையில், “பரியேறும் பெருமாள் ஹிட்டான உடனேயே இந்த படம் கமிட்டானேன். ஆனால் இந்த படம் எடுக்க மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியிருந்ததால் கொஞ்சம் டைம் தேவைப் பட்டது. அது போல துருவையும் தயார் பண்ண டைம் தேவைப்பட்டது. இந்த படத்தில் எனக்கு சவாலான விஷயம் ஸ்போர்ட்ஸ் மட்டும் கிடையாது. உளவியலாக இந்த படத்தை அணுக ஒரு முதிர்ச்சி தேவைப்பட்டது. அதோடு எனக்கு ஒரு தெளிவான அரசியல் புரிதல் வந்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்ற பிளான் இருந்தது. என்னுடைய படங்களில் நிறைய உழைப்பும் நிறைய யோசனையும் அதிகமாக வைத்து எடுத்த படம் பைசன் தான்.
மணத்தி கணேசன் என்னுடைய சொந்தக்காரர். அண்ணன் முறை வேண்டும். சின்ன வயதில் இருந்தே அவரை தெரியும். அவர் தான் என்னுடைய பால்ய காலத்து ஹீரோ. அவர் விளையாடுகிறார் என்றாலே ஓடு போய் முன் வரிசையில் உட்காந்து பார்ப்பேன். ஆனால் அதை படம் பண்ண வேண்டும் என எனக்கு தோன்றியதே இல்லை. இந்த படம் பண்ணுவதற்கான நோக்கம் என்ன வென்றால் நான் என்னுடைய அறிவு, வாசிப்பு.. இதை மைய்யமாக வைத்து தென் தமிழகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கதை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் எந்த பிளாட்டில் இருந்து சொல்வது எனத் தெரியவில்லை. அப்போது கணேசன் அண்ணனை எதேச்சையாகப் பார்த்த போது, அவரது வெற்றியும் வாழ்க்கையும் நினைவுக்கு வந்தது. அவரிடம் உங்க கதையை படம் பண்ண ஆசைப்படுகிறேன் எனக் கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அதனால் அவரது பயணத்தை ஒரு கருவாக வைத்துக் கொண்டு நான் ஆசைப்பட்டு யோசித்த கதையையும் இணைத்து ஒரு புனைவுக் கதையாக இதை எடுத்திருக்கிறேன்” என்றார்.