கேரளாவில் 2017ஆம் ஆண்டு ஒரு மலையாள நடிகை 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடைமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப்பை விடுதலை செய்தது. இதில் முதல் குற்றவாளி பல்சர் சுனிலுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்பு மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் திலீப்பின் விடுதலை கடும் விவாதத்துக்கு உள்ளானது. மலையாள நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இவர்களோடு பெண்கள் நல அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே கேரளா அரசு சார்பில் திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.
இதனிடையே நீதிமன்றத்தில் இருந்து விடுதலைக்கு பின்பு வெளியே வந்த திலீப், அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை குற்றம் சாட்டினார். அவர்தான் இந்த வழக்கில் சதி இருப்பதாக கூறியதாகவும் அதன் பிறகு தான் எனக்கு எதிராக சதி தொடங்கப்பட்டது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் மஞ்சு வாரியர் திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தை உடல்ரீதியாகச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த மூளை, அது யாராக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது, அது மிகவும் அச்சமூட்டுகிறது. இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்கும்போதுதான் நீதி முழுமையடையும்.
இது ஒரு பாதிக்கப்பட்டவருக்காக மட்டுமல்ல. இது தங்கள் பணியிடங்களிலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி, தலைநிமிர்ந்து, துணிச்சலுடன் நடக்கத் தகுதியான ஒவ்வொரு பெண், ஒவ்வொரு மனிதருக்காகவும் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/19-41-2025-12-15-12-17-42.jpg)