பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்திருக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற பாடல்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் திருமண பந்தத்தில் தாலிக்கு பின்னாடி இருக்கிற ஒரு பெண்ணுடைய உணர்வுகளைப் பற்றி பேசியிருப்பது போல் அமைந்திருந்தது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷ்னல் நிகழ்ச்சி சென்னையில் ஒரு தனியா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மமிதா பைஜூ, “மக்களின் அன்பு என்னுடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. அவர்களுடைய ஆதரவும் என்னை அவர்களுள் ஒருவராக பார்ப்பதை உணரவைக்கிறது. அதற்காக பெரிய நன்றி.
டியூட் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், எனக்கு ஒரு ஸ்பெஷலான படம். ஏனென்றால் படப்பிடிப்பில் படக்குழுவிடம் ஜாலியாக இருந்தது. பிரதீப் ஒரு நல்ல கோ-ஸ்டார். தெரிந்தும் தெரியாமலும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கார். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அதே போல் சரத்குமார் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் நான் அமைதியாக இருந்தால், என்ன ஆனது எனக் கேட்பார். யாருமே அப்படி கேட்க மாட்டார்கள். அப்படி ஒரு முறை கேட்கும் போது, அடுத்த சீனை நினைத்து பதட்டமாக இருக்கிறது என சொன்னேன். அவர் உட்கார்ந்து என்னிடம் பேசினார். அவர் அப்படி பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர் பண்ணினார். அதுதான் அவர் மீது நான் அன்பு வைக்க காரணம்” என்றார்.