பிரேமலு படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான மமிதா பைஜு தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் ஜிவி பிரகாஷுடன் ‘ரெபல்’ படம் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் நடித்தார். இப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜயின் கடைசி படமாக சொல்லப்படும் ஜனநாயகன், சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் இன்னும் பெயிரிடப்படாத படம் மற்றும் தனுஷின் 54 வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தது. இத்தகவலை தற்போது மமிதா பைஜு மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு ஊடகத்தில் பேசிய அவர், “நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை ஆனால் யாரோ ஒருவர் எனக்கு அந்த சம்பள செய்தி லிங்கை அனுப்பினார். நேர்மையாக சொல்லப்போனால் அந்த செய்தியின் கமெண்டைகளைப் பார்த்து ஷாக்காகி விட்டேன். மக்கள் அதை முழுசாக நம்புகிற மாதிரி இருந்தது. சிலர் 15 கோடி வாங்கும் அளவிற்கு அவர் வளர்ந்து விட்டாரா என எழுதியுள்ளார்கள். மக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி அனைத்தும் உண்மை இல்லை என்ற விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
Follow Us