இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முதலில் ஒடிசாவில் துவங்கியது. தொடர்ந்து கென்யா நாட்டில் நடக்கவுள்ளது. சமீபத்தில் படத்தின் பிரித்விராஜ் லுக் வெளியானது, கும்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பிரியங்கா சோப்ரா லுக் வெளியானது. இவர் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் படக்குழு சார்பில் க்ளோம் ட்ரோட்டர் என்ற தலைப்பில் ஹைதரபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. சமீபத்தில் இந்நிகழ்சிக்கான பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இப்பாடலை ஸ்ருதிஹாசன் பாடியிருக்க ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். 

Advertisment

நிகழ்ச்சியில் படத்தின் தலைப்பு, அறிமுக வீடியோவுடன் வெளியிடப்பட்டது. ‘வாரணாசி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். வீடியோவில் பிரம்மாண்ட காட்சிகளும் மாடு மேல் மகேஷ் பாபு கையில் சூலத்துடன் உட்கார்ந்து வரும் காட்சிகளும் இடம்பெறுகிறது. அவர் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டைட்டில் அறிவிப்பை தவிர்த்து தொழில்நுட்ப கலைஞர்களையும் படக்குழு இதன் மூலம் உறுதிசெய்துள்ளது. ஏற்கனவே தகவல் வெளியானது போல் இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோ பிஸ்னஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது. இசை எப்போதும் போல் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் கீரவாணி தான். 

நிகழ்வில் மகேஷ் பாபு பேசுகையில், “இது என்னுடைய கனவு படம். வாழ்க்கையில் ஒருமுறை தான் நடக்கும். இந்தப் படத்தால் நான் எல்லோரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை மிகவும் பெருமைப்படுத்துவேன். இந்தப் படம் வெளியானால் ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமைப்படும்” என்றார். இடையே அவரது தந்தை குறித்து பேசுகையில், “என் தந்தை என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். அவர் சொல்வதை அனைத்தையுமே கேட்டுக் கொள்வேன். ஆனால் அவர் புராண கதையில் நீ நடி, அந்த தோற்றத்தில் நன்றாக இருப்பாய் என சொன்னார். அதை மட்டும் கேட்காமலே இருந்தேன். ஆனால் இன்று என் பேச்சை அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவருடைய ஆசி எப்போதும் நம்முடன் இருக்கும்” என்றார்.

Advertisment