தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மகத் ராகவேந்திரா. பாலுவுட்டிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் மகத் தனது உடல்கட்டமைப்பை மெருகேற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு.
கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள 'Mechanic' என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது.
இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும். கடவுள் ஆசீர்வாதத்துடன், எனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய அத்தியாயத்திலும், நான் எப்போதும் மதிக்கும் உங்கள் ஆதரவைத் தேடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us