பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மகளிர் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜாய் சிரிசில்டாவிடமும் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். மேலும் இது குறித்து யூட்யூப் சேனல்களில் பேட்டியும் கொடுத்து வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல் ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. இது ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்துகையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததால், அது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன் என விளக்கமளித்திருந்தார். பின்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகியிருந்தார். ஆனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமான நிலையில் ஆஜராகியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் ஆஜாகுவதற்கு நீதிமன்றம் படியேறும் காட்சிகள் பார்ப்பவர்களை கலங்கடித்தது. இதையடுத்து ஜாய் கிரிசில்டா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பின்பு அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஜாய் கிரிசில்டாவிற்கு குழந்தை பிறந்ததையடுத்து மகளிர் ஆணையம் காவல்துறை ஆணையருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதில் மாதம்பட்டி ரங்கராஜிடம் முன்னதாக நடந்த விசாரணையில் அவர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்தது உண்மைதான் எனவும் அவரது குழந்தைக்கு தான் தான் தந்தை எனவும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைக்கு தந்தை என ஒப்புக் கொண்டுள்ளதால் டிஎன்ஏ டெஸ்ட் தேவையில்லை எனக் கூறிய மகளிர் ஆணையம் வழக்கு முடியும் வரை குழந்தைக்கான பராமரிப்பு செலவுகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வழக்கு தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஜாய் கிரிசில்டாவை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.
செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது பிஎம்டபள்யூ காருக்கு ரூ. 1.25 லட்சம் மாதாந்திர ஈஎம்ஐ-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us