பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகள் முன் விளக்கமளித்திருந்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீலாங்கரை காவல் துறையினர், சம்மன் அனுப்பினர். 

Advertisment

இதனிடையே ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். மேலும் இது குறித்து யூட்யூப் சேனல்களில் பேட்டியும் கொடுத்து வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக 22ஆம் தேதிக்குள் ஜாய் கிரிசில்டா பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது. அதே போல் ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. இது ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்துகையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததால், அது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

நீதிமன்ற வழக்கு ஒரு பக்கம் இருக்க ஜாய் கிரிசில்டா தான் கொடுத்த புகாரில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என தற்போது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் காவல் நிலையம் என அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் மாதம்பட்டி ரங்கராஜ் மௌனம் காத்தே வந்தார். இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். 

இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.
ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும். எனது இதயபூர்வமான நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment