பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் திடீரென மாதம்பட்டி ரங்கராஜும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்தாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அது குறித்து அவர் விளக்கமளிக்காமலே இருந்து வந்தார்.
இதையடுத்து ஜாய் கிரிசில்டா திருமணத்தை அறிவித்த அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி தன்னுடன் வாழாமல் ஏமாற்றிவிட்டதாக மகளிர் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக ஜாய் சிரிசில்டாவிடமும் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடைபெற்றது. இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவும் ஜாய் சிரிசில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு குறித்து முதல் முறையாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன் என விளக்கமளித்திருந்தார். பின்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகியிருந்தார். ஆனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமான நிலையில் ஆஜராகியிருந்தார்.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மகளிர் ஆணையம், காவல்துறை ஆணையருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதில் மாதம்பட்டி ரங்கராஜிடம் நடந்த விசாரணையில் அவர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்தது உண்மைதான் எனவும் அவரது குழந்தைக்கு தான் தான் தந்தை எனவும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கமளித்தார். மேலும் பல முறை மிரட்டியதால் தான் இந்த கல்யாணம் நடைபெற்றது எனவும் பணம் பறிக்கும் நோக்கில் இக்கல்யாணம் நடைபெற்றது என்றும் கூறியிருந்தார். ஆனால் இதனை ஜாய் கிரிசில்டா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா, மாதம்பட்டி ரங்கராஜ் கூறிய அதே குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதாவது ஜாய் கிரிஸல்டா பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜிடம் பழகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த மார்ச் மாதத்தில் என் குடும்ப புகைப்படத்தை நான் பதிவிட்ட போது ஏப்ரல் மாதமே ஜாய் கிரிசில்டா ஒரு ஆபாசமான மெசேஜை அனுப்பினார். நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஒருவருக்கு இது போன்ற மெசேஜை ஏன் அனுப்பினார்? இந்த ஒற்றை உண்மை அவருடைய இரட்டை வேடத்தையும் பண ஆதாயத்துக்காக அவர் ஊடகங்களை எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார் என்பதையும் அம்பலப்படுத்துகிறது. இது எங்கள் குடும்பத்தின் அமைதியை அளிக்கும் நோக்கில் இருக்கிறது.
என் கணவர் ரங்கராஜிடம் இருந்து என்னை பிரித்து அவரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரே கைப்பட எழுதிய கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணமோ வீடோ அல்லது ரங்கராஜிடமிருந்து என்னை பிரிக்கவோ அவர் ஒருபோதும் விரும்பவில்லை என பேட்டி கொடுத்து வந்தாலும் அவருடைய சொந்த வார்த்தைகள் வேறு விதமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர் ஜாய் கிரிசில்டா எழுதியதாக சொன்ன கடிதத்தில் இருக்கும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ரங்கராஜ் தனது பொருளாதார தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் சமூகத்திற்கு தன்னை மனைவியாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் ஒரு பிளாட் வாங்கி தர வேண்டும் எனவும் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்ய வேண்டும் எனவும் ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டதாக இடம்பெற்றுள்ளது.
இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டி அந்த அறிக்கையில் தொடர்ந்து கூறிய ஸ்ருதி, “என் கணவரிடம் இருந்து பணம் பறித்து அவரது சட்டபூர்வ மனைவியான என்னை அவரிடம் இருந்து பிரிப்பதே ஜாய் கிரிசில்டாவின் நோக்கமாக இருப்பது என்பதை கடிதம் காட்டுகிறது. நான் என் கணவருடன் கடைசி வரை உறுதியாக நின்று பாதுகாப்பேன்” என்றுள்ளார்.
Follow Us