இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 மற்றும் பாலிவுட்டில் ஆமீர்கானுடன் ஒரு படம் பண்ண கமிட்டாகி இருந்தார். இதனிடையே ரஜினி - கமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒன்றாக நடிக்கும் படத்தை இவர் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வெளியேறி விட்டார். அதேபோல் பாலிவுட்டிலும் அவர் இயக்க உள்ள ஆமிர்கானின் படமும் கைவிடப்பட்டது. இதனால் விரைவில் அவர் கைதி 2 படம் இயக்குவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே நாயகனாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து தனது அடுத்த படங்களின் அப்டேட்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் படங்களில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் அமைவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “என் படங்கள் மீது நீண்ட நாட்களாகவே இந்த குற்றச்சாட்டை வைக்கின்றனர். என்னுடைய படங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், போதைப் பொருட்களை பயன்படுத்தினால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நான் எங்குமே சொல்லி இருக்கமாட்டேன். கமர்ஷியல் படங்களே செய்தாலும் எனக்கென்று ஒரு சமூக அக்கறை உள்ளது. அதை மீறி நான் எதுவும் செய்ததில்லை.
என்னுடைய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் வரை எனக்கு கிடைத்த ஹீரோக்கள் மூலமாக போதைப் பொருட்களுக்கு எதிராக பேச முடியுமோ அதை உரக்க பேசுகிறேன். எவ்வளவு தூரம் போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளுக்கு நான் ஆதரவு அளித்திருக்கிறேன் என்று எனக்குதான் தெரியும். என் சார்பாக அவ்வளவு பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்லூரி கல்லூரியாக சென்று இதை ஒரு பிரச்சாரமாகவே செய்து கொண்டிருக்கிறேன். 15 ஆயிரம் மாணவர்களை போதைப் பொருட்களை தொடமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறேன். கோவை ஆணையர் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிராக குறும்படப் போட்டி அறிவித்து அதில் வெற்றி பெறுபவரை என்னுடைய உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர்கள் எல்லாம் இப்போது என்னுடைய உதவி இயக்குநர்கள். இவ்வளவு விஷயங்களை என் பக்கத்திலிருந்து நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இவையெல்லாம் நான் சினிமாவுக்காக செய்யவில்லை. ஆனால் நான் எவ்வளவு செய்தாலும் நாங்கள் நல்லதை பார்க்கவே மாட்டோம், கெட்டதைத்தான் பார்ப்போம் என்று சொன்னால் நான் என்னதான் செய்வது” என்றார்.
Follow Us