இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 மற்றும் பாலிவுட்டில் ஆமீர்கானுடன் ஒரு படம் பண்ண கமிட்டாகி இருந்தார். இந்த இரண்டு படமுமே தற்போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் ‘மார்கழியில் மக்களிசை’ இசை தொடக்க நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தமிழர்களின் பாரம்பரியம் அழிந்து வருவது தொடர்பான கேள்விக்கு, “எல்லா காலகட்டத்திலும் கலை என்பது மக்களுக்கானது. அதை மக்களிடம் சேர்ப்பதற்கு ஏதாவது ஒரு கலை வடிவம் மூலம் தங்களால் முடிந்ததை நிறைய பேர் செய்து வருகிறார்கள். அதனை பல்வேறு வழிகளில் செய்து வரும் ரஞ்சித் அண்ணாவுடன் சக இயக்குநராக துணை நிற்க வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் ஏகப்பட்ட சுயாதீன கலைஞர்கள் உட்பட பலரையும் இந்த நிகழ்ச்சி மூலம் அவர் சினிமாவுக்கு கொண்டுவந்திருக்கிறார். அவர்களை நாங்களும் படங்களில் பயன்படுத்தி வருகிறோம். அதனால் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” என்றார்.
பட்டியல் சமூக மக்கள் மீதான பார்வை மாற வேண்டும் என்பது தொடர்பான கேள்விக்கு, “மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தான் வர வேண்டும். எல்லாருமே சிந்தித்து செயல்பட்டால் போதுமானது என்று நினைக்கிறேன்” என்றார். பின்பு கூலி படம் தொடர்பான கேள்விக்கு, “கூலிப்படம் முடிந்த பிறகு எனக்கு எந்த நேர்காணலும் வரவில்லை. ஏனென்றால் அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தேன். மக்களுக்கு நன்றி தெரிவிக்க எனக்கும் சரியான மேடை கிடைக்கவில்லை. கூலிப் படம் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தது. மக்களுக்காக ஒரு படம் கொடுக்கும்போது விமர்சனங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதை அடுத்த படங்களில் செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன். அதேபோல் எல்லா விமர்சனங்களையும் தாண்டி மக்கள் ரஜினி சாருக்காகவும் இந்த படத்துக்காகவும் தியேட்டருக்கு சென்று பார்த்தார்கள். ரூ.500 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் சொன்னார். இதற்கு காரணம் மக்களுடைய சப்போர்ட் தான்” என்றார்.
Follow Us